கரூர் எம்.பி செ.ஜோதி மணி | கோப்புப் படம் 
தமிழகம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி: எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கரூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை முடக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என கரூர் எம்.பி செ.ஜோதி மணி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேவர் மலை, மேலப் பகுதி, கீழப் பகுதி, மாவத்தூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கரூர் எம்.பி ஜோதி மணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், பணிகளின் தன்மை, ஊதியம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர், அவர் கூறியது: நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதி திட்டப் பணிகளுக்கு ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ரூ.2.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில், தற்போது ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதால், பணியாளர்களுக்கு உரிய காலத்துக்குள் ஊதியத்தை வழங்க முடியாத சூழல் உள்ளது. மேலும், இப்பணிகளை முடக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம்.

கடவூர் பகுதி பொது மக்கள் பயன்பாட்டுக்காக தரகம்பட்டியில் எம்.பி நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைலம்பட்டி அரசு மருத்துவமனையை எம்.பி நிதியின் மூலம் தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT