உதகையிலுள்ள ஆவின் வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், பால் முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ். படம்: ஆர்.டி.சிவசங்கர் 
தமிழகம்

நீலகிரியில் ஆவின் நிறுவனம் மூலமாக கடந்த ஆண்டு 4 டன் இனிப்புகள் விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

செய்திப்பிரிவு

உதகை: ஆவின் நிறுவனம் மூலமாக கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 4 டன் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

உதகையிலுள்ள ஆவின் வளாகத்தில் ஆவின் இனிப்புகள் விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஆவின் நிறுவன பொது மேலாளர் ஜெயராமன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிதர்ஷினி தலைமை வகித்தார்.

ஆவின் நிறுவன இணை இயக்குநர் லட்சுமணன், உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கணேஷ், உதகை நகராட்சி தலைவர் எம்.வாணீஷ்வரி, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளம், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விற்பனையை தொடங்கிவைத்து பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசியதாவது: ஆவின் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் வழங்கும் பாலுக்கு ஆதார விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 30 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது.

தரமான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் நிறுவனத்தில் 35 ஆயிரம் பணியாளர்கள், 10 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள், பல லட்சம் விவசாயிகள் மற்றும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ஆவின் நிறுவனத்தில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, செலவுகளை குறைக்கும் வகையில், மின் கட்டணம் 9.6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

உதகையிலுள்ள ஆவின் நிறுவனத்தில் விற்பனைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் மூலமாக தயாரிக்கும் இனிப்புகள், கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் இந்த முறை அதிக ஆர்டர் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, ஆவின் நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு பால் தரம் பார்க்கும் கருவிகள், நிலுவைத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன். நீலகிரி மாவட்டத்தில் பால் மற்றும் பால் தயாரிப்புகள் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறைப்படுத்தப்படும். கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆவின் நிறுவனம் மூலம் 4 டன் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த முறை இலக்கு 5 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT