சென்னை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்றுஆலோசித்தார்.
இன்று (21-ம் தேதி) முதல் திங்கள் வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த தினங்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழாக்களும் நடைபெறுகின்றன. இதையொட்டி பணிக்காகவும், வேறுகாரணங்களுக்காகவும் சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்கள், குடியேறியவர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். இதற்காக நேற்றுமுதல் படிப்படியாக பலர் பயணங்களைத் தொடங்கி விட்டனர்.
நெரிசலைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் சிறப்பு ரயில்கள் மற்றும்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து போக்குவரத்து போலீஸார் வாகனங்களையும், பயணிகளையும் ஒழுங்குபடுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு போலீஸார் உறுதியாக இருக்க வேண்டும். மேலும், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்,சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் காவல் ஆணையர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசித்தார். இதில் காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஆஸ்ரா கர்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து காவல்), கபில் குமார் சி.சரத்கர் (தலைமையிடம்), செந்தில் குமாரி (மத்திய குற்றப்பிரிவு) உட்படப் பலர் கலந்து கொண்டனர்.