சென்னை: மாரடைப்பால் இதயத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்ட பெண்ணுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற் கொண்டு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவ மனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நெஞ்சு வலி ஏற்பட்ட 42 வயதுடைய பெண் ஒருவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டதில் இதயத்தின் ரத்த நாளத்தில் முழு அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இதய இடையீட்டு சிகிச்சை அரங்கில் (கேத் லேப்) அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், அப்பெண் ணுக்கு திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு இதயம் மற்றும் நுரையீரலை மீட்கும் உயிர் காக்கும் சிகிச்சை (சிபிஆர்) அவருக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து எக்கோ பரிசோதனை மேற்கொண்டபோது, அந்த பெண்ணின் இதயத்தை சுற்றி ரத்தக் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. இடது வெண்டிரிக்கிள் ரத்தக் குழாய் சேதமடைந்ததால் இப்பிரச்சினை நேர்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் டி.பெரியசாமி தலைமையில் இதய நல மருத்துவ நிபுணர்கள் எஸ்.ரமேஷ், நாகேந்திர பூபதி, மயக்கவியல் மருத்துவர்கள் ராஜேஷ், கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து சேதமடைந்த இதய நாளங்கள் சரி செய்யப்பட்டன. இதில் குணமடைந்த அந்தப் பெண் ஐந்து நாட்களில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.