தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமகவின் சென்னை மாவட்ட பொதுக்குழு எம்எம்டிஏ-வில் உள்ள ஐஸ்வர்யா மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார்.
தீர்மானங்கள்
மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், சென்னையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வரும் 22-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற் றப்பட்டன.
இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
எங்களைப் போல தமிழகத்தில் எந்த கட்சியும் போராட்டங்களை நடத்தியதில்லை. போராட்டங்கள் தான் ஒரு கட்சியின் வளர்ச் சிக்கு அடிப்படையாகும். தர்மபுரி யிலும், கன்னியா குமரியிலும் தற்போது மாற்றம் வந்துள்ளது. அது தமிழகத்தின் மற்ற பகுதி களிலும் வரவேண்டும்.
அதிமுக, திமுகவை வேரோடும் வேரடி மண்ணோ டும் அழிக்க வேண்டும். இந்த கட்சிகளை அழிக்கும் பலம் பாமகவிடம் தான் இருக்கிறது. 2016-ல் தமிழகத்தில் பாமக ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில பொருளாளர் சையது அக்பர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்தை விமர்சித்த அன்புமணி
பாமகவின் சென்னை மாவட்ட பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடான வழியில் வெற்றி பெற்றதுபோல், வரும் சட்டமன்றத் தேர்தலில் செய்ய முடியாது. அதனால் 2016-ம் ஆண்டு பாமக தலைமையில் ஆட்சி அமையும். பாமக 25 ஆண்டுகளாக பல போராட்டம், கஷ்டங்களை கடந்து வந்துள்ளது. ஏ.கே.மூர்த்தி தலைமையில் டெல்லியில் போட்டியிட்ட பாமக 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. ஆனால் விஜயகாந்த் கட்சியினர் டெல்லியில் 10, 15 இடங்களில் போட்டியிட்டு வெறும் 2 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது,” என்றார்.