அரக்கோணம்: வாலாஜா அருகே தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது, மாணவர்களை பத்திரமாக மீட்டு மாவட்ட ஆட்சியர் வளர்மதி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சி வழியாக நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் வளர்மதி வாகனத்தில் நேற்று சென்றார். அப்போது, வாலாஜா அடுத்த பொன்னப்பந் தாங்கல் கூட்டுச்சாலை வழியாக மாவட்ட ஆட்சியரின் வாகனம் சென்றபோது, எதிரே தனியார் மழலையர் (நர்சரி பள்ளி) பள்ளியில் படிக்கும் 8 சிறார்களை ஏற்றிக்கொண்டு வந்த மினிவேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதை பார்த்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். தன்னுடன் வந்த அரசு ஊழியர்கள் மற்றும் காவலருடன் விபத்தில் சிக்கிய சிறார்களையும், ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டார். மேலும், அதிர்ஷ்டவசமாக சிறார்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அச்சத்தில் இருந்த சிறார்களிடம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறிது நேரம் பேசி அவர்களின் பதற்றத்தை போக்கினார். பின்னர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாகனத்தில் சிறார்களை பத்திரமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.