சென்னை: புட்லூர் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தில் மின்தூக்கி வசதி ஏற்படுத்த வேண்டும் என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கே.ராகவேந்திர பட் என்ற வாசகர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது: திருவள்ளூர் அருகில் உள்ளது புட்லூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் அருகில் காக்களூர் தொழிற்பேட்டை மற்றும் புட்லூர் அம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை உள்ளன.
பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல், காக்களூர் தொழிற்பேட்டைக்கு ஏராளமான தொழிலாளர்கள் தினமும் ரயில் மூலம் வந்து செல்கின்றனர்.
புட்லூர் ரயில் நிலையத்தை நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன. இதில், 2 நடைமேடைகளில் பொதுமக்கள் செல்வதற்காக நடைமேம்பாலம் உள்ளது. தற்போது, 3-வது நடைமேடையில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் பயணச் சீட்டு கவுன்ட்டர் உள்ளது. பொதுமக்கள் இதுவரை ரயில் நிலையம் அருகில் உள்ள கடவுப் பாதை வழியாக சென்று பயணச்சீட்டு எடுத்து வந்து ரயில் ஏறி செல்வது வழக்கமாக இருந்தது.
தற்போது, நடைமேம்பாலம் கட்டப்படுவதால் இந்த கடவுப் பாதை அடைக்கப்பட்டுவிட்டது. இதனால், பொதுமக்கள் தற்போது நடைமேம்பாலத்தின் மீது ஏறி முதலாவது நடைமேடைக்குச் சென்று பயணச்சீட்டு எடுத்துவிட்டு மீண்டும் நடைமேம்பாலத்தில் ஏறி 2-வது நடைமேடையில் வந்து இறங்கி சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரைக்குச் செல்லும் ரயில்களில் ஏறி செல்கின்றனர்.
இந்த நடைமேடை மிக உயரமாக இருப்பதால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும், இந்த வழித்தடத்தில் குறைவான அளவிலேயே மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுவதால், ஒரு ரயிலை தவற விட்டால் குறைந்தபட்சம் அடுத்த ரயில் வர அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், காலை நேரத்தில் வேலைக்குச் செல்பவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு நடைமேடையில் மின்தூக்கி (லிஃப்ட்) வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல், நடைமேடை மீது நிழற்கூரை அமைக்க வேண்டும். இதன் மூலம், பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் நடைமேடையில் சிரமமின்றி நடந்து செல்ல முடியும் என்றார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, தற்போது முதற்கட்டமாக புட்லூர் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக, மின்தூக்கி வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், நடை
மேடை மீது மேற்கூரையும் அமைக்கப்படும் என்றனர்.