கோப்புப்படம் 
தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் - ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைந்தார். அவருக்கு வயது 82. அடிகளாரின் மறைவு, அவரது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் கோபால நாயக்கர் - மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக கடந்த 1941 மார்ச் 3-ம் தேதி பிறந்தார் பங்காரு அடிகளார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சுப்பிரமணி. மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கம் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். பின்னர், அச்சிறுப்பாக்கம் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

சிறுவயது முதலே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இவர், வேப்பமரத்தின் அடியில் குறிசொல்லி வந்தார். இவரை அம்மனின் அருள்பெற்றவராக பக்தர்கள் வணங்கி வந்தனர்,

இந்த நிலையில், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970-ம் ஆண்டு நிறுவினார். கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடையின்றி வழிபடலாம் என்பது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பக்தர்களால் ‘அம்மா’ என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்.

ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இதன்மூலம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சிலநாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பங்காரு அடிகளார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை உடல்நலம் மிகவும்பாதிக்கப்பட்டதால் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிற்பகலில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட பங்காரு அடிகளார் மாலை 5 மணி அளவில் மறைந்தார்.

இதையடுத்து, பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அருகே உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டில் பங்காரு அடிகளாருக்கு மத்திய அரசு பத்ம விருது வழங்கி கவுரவித்தது. பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடந்தது. இவர்களுக்கு அன்பழகன், செந்தில்குமார் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

பங்காரு அடிகளார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓபிஎஸ், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பங்காரு அடிகளார் மறைந்த தகவல் பரவியதும், ஆதிபராசக்தி கோயிலுக்கு அருகேஉள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மருத்துவமனை மற்றும் கோயில் அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடுமுழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மேல்மருவத்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட் டங்களை சேர்ந்த 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக செங்கல்பட்டு எஸ்.பி. சாய் பிரனீத் தெரிவித்தார்.

இன்று இறுதிச் சடங்கு: பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ‘‘பங்காரு அடிகளாரின் சேவைகளை போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார். நேற்று இரவு பங்காரு அடிகளார் உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.

SCROLL FOR NEXT