திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்தகடவுள் புகைப்படமோ, சிலையோ வைக்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல், உண்மைக்குப் புறம்பானது என்றுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன்பெயரில் சமூக வலைதளங்களில் வெளியான சுற்றறிக்கையில், ஆயுத பூஜையை முன்னிட்டுகல்லூரி மற்றும் மருத்துவமனைவளாகத்தில் எந்த இடங்களிலும் மதம் சார்ந்த கடவுள் புகைப்படமோ அல்லது சிலையோ வைக்கக்கூடாது எனவும், அவ்வாறு ஏதேனும் வைக்கப்பட்டு இருந்தால் எதிர்காலப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும்குறிப்பிடப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தசுற்றறிக்கை, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேலும், அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவனை டீன் முருகேசன் கூறும்போது, “சுற்றறிக்கைமுற்றிலும் தவறானது. நான்அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் பரவிய சுற்றறிக்கை உண்மைக்குப் புறம்பானது” என்றார்.