சென்னை: திருல்லிக்கேணியில் மாடு முட்டி தள்ளியதால் படுகாயமடைந்த முதியவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர பகுதியில் பொதுமக்களை மாடுகள் முட்டி, காயப்படுத்துவது தொடர்கதையாக இருந்துவருகிறது. ஏற்கெனவே அரும்பாக்கத்தில் பள்ளி மாணவி, நங்கநல்லூர் பகுதியில் முதியவர் மாடுகள் முட்டிகாயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் நேற்று காலை வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிசுந்தரம் (80) என்பவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் காயமடைந்தார்.
அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அவரை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி, சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஆணையர் ராதாகிருஷ்ணன், திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து 5 மாடுகளை பிடித்து, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதியவரை முட்டிய மாட்டின் உரிமையாளர் மீது உரிய சட்டப் பிரிவின்கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் இந்த ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்து 737மாடுகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தெருக்களில் அத்துமீறி நடமாடவிடும் மாடுகள் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன், உயிரிழப்பை ஏற்படுத்துவது, கால்நடைகளை முறையாக பராமரிக்காதது போன்ற சட்ட விதிகளின்கீழ் மாட்டு உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி தனது நடவடிக்கையில் பின்வாங்காது. மாடுகளை பிடிக்க வரும் பணியாளர்களிடம் தகராறு செய்தால், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் சட்டத்தின் கீழும் மாடுகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளை, போதிய இடத்தில் வளர்க்க வேண்டும். தெருவில் வளர்க்க யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
15 நிமிடம் கவனிப்பாரில்லை: திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் முதியவர் சுமார் 15 நிமிடங்கள் சாலையிலேயே விழுந்து கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் யாரும் அவரை கண்டுகொள்ளாமல் சென்றனர். மனிதநேயம் அற்றுப்போய், சக மனிதனுக்கு உதவி செய்யக்கூட யாரும் முன்வராதது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.