காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத். 
தமிழகம்

பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

மறைமலை நகர்: பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், மண்ணிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நேற்று முன்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் அரசு பணிபுரியும் பெண்களுக்கான தோழி தங்கும் விடுதியை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தங்கியுள்ள பெண்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், தரப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் மாணவிகள் காலை உணவை தவிர்க்காமல் தினமும் உண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இங்கு தங்குபவர்கள் தங்களுக்கு தேவையான சத்தான உணவுகளை சமைத்து சாப்பிடுமாறும் அறிவுறுத்தினார். இவ்விடுதியில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்தி பார்த்தார்.

மேலும் தங்குவதற்கான குளிர்சாதன கட்டண அறை ரூ.8,500, சாதாரண கட்டண அறை ரூ.6,500 வசூலிக்கப்படுவது குறித்து விடுதியின் மேலாளரிடம் கேட்டறிந்தார். இங்கு தங்கியுள்ளவர்கள் வெளியில் செல்லும் போதும், உள்ளே வரும் போதும் மின்னணு வருகை பதிவு இயந்திரத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யப்படுகிறதா? என மேலாளரிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, மறைமலை நகர் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவை பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து புதன்கிழமை வழங்கப்படும் உணவான பொங்கல், காய்கறி சாம்பாரை அருந்தி ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவிகளிடம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் தெரியுமா என கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு தலைமை ஆசிரியரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT