புதுச்சேரி: சந்திர பிரியங்காவை பிரிந்து வாழும் கணவரை அவரது அரசுஇல்லத்துக்குள் நுழைய போலீஸார் அனுமதி மறுத்தனர்.
புதுச்சேரியின் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்வதாக ஆளுநர், முதல்வர் அலுவலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்தார்.ஆனால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியிருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.
முதல்வரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, மத்திய உள் துறைக்கு அக்கோப்பு அனுப்பப் பட்டது. ஆனால், இதுவரை சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியாகவில்லை. இவ்விவகாரம் தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது.
சந்திர பிரியங்கா தனது கடிதத்தில், "ஜாதி, பாலின ரீதியில் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்" என்று குறிப்பிட்ட கருத்து கடும் விவாதத்தை கிளப்பியது. இது பற்றி முதல்வர் ரங்கசாமி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தரப்பில் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தான் அமைச்சர் பதவியில் செயல்பட்டது குறித்து 9 பக்க சாதனைப் பட்டியல் ஒன்றை வெளியிட்ட சந்திர பிரியங்கா, அதன்பின் தனது சமூக வலைதள ‘அட்மின்’ மூலம் ஆளுநர் தமிழிசையை விமர்சித்தார். அதன் பிறகு எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.
இந்தச் சூழலில், சந்திர பிரியங்கா வசித்து வரும் துய்மா வீதியில் உள்ள புதுவை அரசு இல்லத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. சட்டப்பேரவையிலும் அவரின் அறை இன்னும் காலி செய்யப்படாமல் இருந்து வருகிறது. அரசு கார், பாதுகாப்பு ஏதும் திருப்பி பெறப்படவில்லை. அவரும் ஒப்படைக்க வில்லை.
இந்த நிலையில் சந்திர பிரியங்காவை பிரிந்து வாழும், அவரது கணவர் சண்முகம் நேற்று காலை துய்மா வீதியில் உள்ள அரசு இல்லத்துக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்தனர். அவர்களை மீறிச்சென்ற சண்முகம், அங்கிருந்த பணியாளர்களிடம் வீட்டின் சாவியை தருமாறு கேட்டார். அவர்கள் தர மறுத்தனர்.
சண்முகம், தனது பொருட்களை எடுத்துச் செல்ல வந்ததாக கூறினார். ஆனால் பணியாளர்கள் சந்திர பிரியங்கா இருக்கும் போது வருமாறு கூறி, சாவியை தர மறுத்து விட்டனர். அதைத் தொடர்ந்து அவர் புறப் பட்டுச் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இது பற்றி விசாரிக்க அவரை செல்போனில் அழைத்தபோது போனை எடுக்கவில்லை.