சிவகங்கை: இந்தியாவில் சாதிதான் பலமும், பலவீனமும் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் பேசினர்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதாவது: தமிழ் மொழி, தமிழ் இனம் பாதுகாப்பாக இருப்பதற்கு பெரியார், அண்ணா, கருணாநிதிதான் காரணம். அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் சரித்திரத் தலைவர்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு, சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டு சென்றார். நேரு அணி சேரா நாடுகளின் தலைவரான காலத்தில் இருந்தே இந்தியா பாலஸ்தீனத்தை ஆதரித்தது. மோடி தற்போது இஸ்ரேலை ஆதரிக்கிறார்.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மோடி, அமித்ஷாவின் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம். ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் மதவாதம். இதுதான் மோடி ஆட்சி. இந்தியாவில் சாதிதான் பலமும், பலவீனமும். இவ்வாறு அவர் பேசினார்.