தமிழகம்

மதுரை நகைக் கடை முறைகேடு: எப்ஐஆர் நகல் தராததால் புகார்தாரர்கள் திடீர் சாலை மறியல்

என். சன்னாசி

மதுரை: மதுரையில் நகைக் கடை முறைகேடு குறித்த புகார்தாரர்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். காவல் துறையினர் எப்ஐஆர் பதிவு நகல் தராததால் இது நடந்ததாக தெரிகிறது.

மதுரை மேலமாசி வீதியில் சில மாதத்துக்கு முன்பாக ‘பிரணவ் ஜூவல்லர்ஸ்‘ என்ற நகைக்கடை திறக்கப்பட்டது. இந்நிறுவனம் பழைய, புதிய நகை மற்றும் தவணை முறையில் பணம் டெபாசித் செய்தால் குறிப்பிட்ட மாதத்தில் கூடுதல் வட்டி கணக்கிட்டு, அதற்கான புதிய நகைகள் செய்கூலி, சேதாரமின்றி வழங்கப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது பழைய நகைகளை டெபாசிட் செய்தும், தவணை முறையில் பணமும் செலுத்தியுள்ளனர். மதுரை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இதன்மூலம் கோடிக்கணக்கில் நகை, பணம் டெபாசிட் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெபாசிட் முதிர்வு காலம் நிறைவுற்ற நிலையில், தங்களுக்கான புதிய நகைகளை பெற வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு சென்றபோது, திடீரென கடையை மூடிவிட்டு உரிமையாளர், ஊழியர்கள் தலைமறைவானது தெரிந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டோர் மதுரை திலகர் திடல் காவல் நிலையம், காவல் ஆணையர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் புகார்களை கொடுத்தனர். இப்புகார்களை ஒருங்கிணைத்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க, காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி, குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் கல்பனா தலைமையில் ஆய்வாளர் வீரம்மாள் அடங்கிய போலீஸ் குழு விசாரிக்கிறது.

இதற்கிடையில், மதுரை விசுவநாதபுரம் பகுதியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் கொடுத்த புகாருக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். எப்ஐஆர் பதிவிட்டு இருந்தால் அதற்கான நகலை வழங்க வேண்டும் என காவல் துறையினடரிடம் கேட்டுள்ளனர். நகல் கொடுக்க தாமதித்ததால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட புகார்தாரர்கள் வழக்கறிஞர் ஜெயபிரபா தலைமையில் விசுவநாதபுரம் சந்திப்பில் திடீரென சாலை மறியல் செய்தனர். பிறகு எப்ஐஆர் நகல் வழங்கப்பட்டதால் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

காவல் ஆய்வாளர் வீரம்மாள் கூறுகையில், ‘பிரணவ் நகைக்கடை முறைகேடு தொடர்பாக 16-ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்தோம். தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஏற்கெனவே பதிவிட்ட எப்ஐஆரில் தொடர்ந்து வரும் புகார்களை இணைத்து கொண்டு விசாரிக்கிறோம். இதுவரை சுமார் ரூ.3.50 கோடி வரையிலான முறைகேடு புகார்கள் வந்துள்ளன’ என்றார்.

SCROLL FOR NEXT