சிந்தாமணி காளியம்மன் கோயில் தெருவில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு வாகன நிறுத்துமிடம். 
தமிழகம்

திருச்சியில் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத வாகன நிறுத்துமிடங்கள்!

அ.சாதிக் பாட்சா

திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலரண் சாலை, சிந்தாமணி காளியம்மன் கோயில் தெரு, தெப்பக்குளம் நந்திகோயில் தெரு ஆகிய இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

திருச்சி மாநகரில் முக்கியமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பெரிய கடைவீதி, சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை, மெயின்கார்டுகேட், சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, என்.எஸ்.பி சாலை, சின்னக் கடைவீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் வாகனம் நிறுத்துமிட வசதி இல்லை. இதனால், வாடிக்கையாளர்கள் பிரதான சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும் வாடிக்கை.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மேலரண் சாலையில் தமிழ்ச் சங்க கட்டிடத்துக்கு எதிரில் சிட்டி கிளப் இருந்த இடத்தில் ரூ.19.70 கோடி மதிப்பில் வணிக வளாகத்துடன் கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி 2019 ஜூலை மாதம் தொடங்கி 2023 ஜூலை மாதம் முடிவடைந்தன. இதில் தரைத் தளத்தில் 4,678 சதுர அடியில் 23 கடைகள், 1,278 சதுர அடியில் ஒரு உணவகம், 860 சதுர அடியில் காபி ஷாப் ஆகியவை அமைய உள்ளன.

மேலரண் சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்.

இது தவிர தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 7,780 சதுர அடியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 2 மற்றும் 3-ம் தளங்களில் தலா 23,120 சதுர அடியில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 150 கார்கள், 550 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இதேபோல, சிந்தாமணி போலீஸ் குடியிருப்பு அருகில் காளியம்மன் கோயில் தெருவில் காய்கறி சந்தையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.

இதில் 1,202 சதுர அடியில் 17 நிரந்தரக் கடைகளும், 964 சதுர அடியில் 32 தரைக்கடைகளும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் தலா 7,260 சதுர அடியில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் 50 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

தெப்பக்குளம் நந்திகோயில் தெரு பகுதியில் கட்டப்பட்டுள்ள இரு சக்கர
வாகன நிறுத்துமிடம்.

இதுதவிர, நந்திகோயில் தெரு பகுதியில் ரூ.98 லட்சம் மதிப்பில் தரை தளத்தில் 66 சிறு கடைகளுடனும், முதல் தளத்தில் 150 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம் 2021-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2022 மார்ச்சில் நிறைவடைந்தன. இந்த வாகன நிறுத்துமிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதுகுறித்து சாலைப் பயனீட்டாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: இந்த வளாகங்களில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஒதுக்கீடு செய்வது, வாடகை நிர்ணயம் செய்வது, ஏலம் விடுவது போன்ற நடைமுறைகளில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வாகன நிறுத்துமிடங்களை மட்டுமாவது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: இந்த 3 வளாகங்களையும் தீபாவளிக்கு முன்பு திறப்பதற்
கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றனர்.

SCROLL FOR NEXT