தமிழகம்

வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரைக்கடைகளை ‘சும்மா’ கட்டி வெச்சிருக்காங்க! - ரூ.82.90 லட்சம் ‘அம்போ’

வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் மாநகராட்சி பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ.82.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தரைக்கடை கட்டமைப்புகள் சேதமடைந்து வருவதுடன், தகர மேற்கூரைகள் துருப்பிடித்து சேதமடைந்து வருகின்றன. எனவே, கடைகளை அகற்றிவிட்டு வாகன நிறுத்துமிடமாக மாற்றினால் வருமானமாவது கிடைக்கும் என கூறப்படுகிறது.

வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகம் போதிய இடவசதி இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. அங்கிருந்த கடைகளுக்கு மாற்றாக மக்கான் பகுதியில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, பழைய மீன் மார்க்கெட் வளாகம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் அந்த இடத்தின் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் வழிவகை ஆய்வு செய்யப்பட்டது. இதற்கிடையில், வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடைஞ்சலாக இருக்கும் தரைக்கடை வியாபாரி களுக்கு கடைகள் கட்டிக் கொடுக்க முடிவானது.

அதன்படி, கடந்த 2015-16-ம் நிதியாண்டில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.82.90 லட்சத்தில் திறந்தவெளி மேடை கடைகள் அமைக்கப்பட்டன. 6 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாக ஒவ்வொரு கடைகள் வீதம் சுமார் 250 கடைகள் கட்டப்பட்டன. கடைகள் அனைத்தும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு தகர மேற்கடைகள் அமைக்கப்பட்டன.வியாபாரிகளுக்காக கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டன.

மேலும், கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள தரைக்கடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு உரிய கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்மூலம், கிருபானந்த வாரியார் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திறந்தவெளி மேடை கடைகள் செயல்பட்ட ஓரிரு நாளிலேயே மீண்டும் அவர்கள் கிருபானந்த வாரியார் சாலையிலேயே வியாபாரம் செய்ய தொடங்கினர். திறந்தவெளி மேடை கடையில் வியாபாரம் நடைபெறவில்லை என்ற காரணங்களை கூறி வெளியேறிய அவர்களை எவ்வளவு முயற்சித்தும் அங்கு செல்ல மறுத்து வருகின்றனர். ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள திறந்தவெளி மேடை கடைகள் பயன்பாட்டில் இல்லாமல் சீரழிந்து வருகிறது.

புதர்மண்டி பாழடைந்து வரும் திறந்தவெளி மேடை கடைகள்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்

தகர மேற்கூரைகள் துருப்பிடித்து ஓட்டை விழ ஆரம்பித்துவிட்டன. கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பாழடைந்து வருகின்றன. வியாபாரிகளின் வசதிக்காக மாநகராட்சியின் வரி வருவாயில் கட்டப்பட்ட கட்டமைப்பால் எந்த லாபமும் இல்லாமல் நஷ்டத்தைத்தான் சந்தித்து வருகிறது. குப்பை கொட்டிய இடமாகவும் தேவையில்லாத பொருட்களை கொட்டி வைக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலுவிடம் கேட்டதற்கு, ‘‘அந்த இடத்தில் வியாபாரம் ஆகவில்லை என நடைபாதை வியாபாரிகள் கூறி வருகின்றனர். மேலும், கடைகள் ஒவ்வொன்றும் குறுகியதாக இருப்பதால் வியாபாரம் செய்ய முடியவில்லை என்றனர்.

இதற்கு தீர்வாக 3 அடி அகலம் கொண்ட கடைகளை 6 அடியாக மாற்றினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தோம். அதுவும் நல்ல யோசனை என மாநகராட்சி அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு அப்படியே கிடப்பில் போய்விட்டது’’ என்றார்.

வேலூர் மாநகராட்சி தரப்பில் தரைக்கடைகளுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்துவிட்டு கட்டமைப்புகளை அகற்றி வாகன நிறுத்துமிடமாக மாற்றினால் மார்க்கெட்டு்க்கு வரும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வாகனம் நிறுத்துமிடமாக மாற்றிவிட்டு கிருபானந்த வாரியார் சாலையில் பொதுமக்கள் அனைவரும் நடந்து செல்லும் வகையில் மாற்ற வேண்டும் என்ற யோசனையும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கிருபானந்த வாரியார் சாலையில் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்ற அடிப்படை யில் தரைக்கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிகமாக தீர்வு காணலாம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT