சென்னை: மார்ட்டின் குழும நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 12 முதல் 16-ம் தேதி வரை வருமானவரி சோதனை நடைபெற்றது. இதுகுறித்து மார்ட்டின் குழுமம் சார்பில் நேற்று விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூறியிருப்பது:
எங்களது குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறையால் சோதனை நடத்தப்படவில்லை. நடைபெற்றது வருமானவரித் துறை சோதனை. இதை மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் இயங்கி வரும் வருமானவரித் துறையினர் நடத்தினர். இதற்காக எங்கள் நிறுவனங்களின் அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால், சட்டவிரோத பண மோசடி தடுப்பு சட்ட விதிகளின்கீழ் அமலாக்கத் துறையினரால் சோதனை நடத்தப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது உண்மைக்கு புறம்பானது.
அந்தந்த மாநில லாட்டரி விதிகளுக்கு இணங்க, எங்கள் நிறுவனங்கள் மாநில அரசாங்க லாட்டரிகளை, லாட்டரி வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் விற்கின்றன.
எங்களது குழும நிறுவனங்கள் ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2023 வரை ஜிஎஸ்டியாக ரூ.23,119 கோடி மாநில, மத்திய அரசுகளின் கீழ் உள்ள அந்தந்த துறைகளுக்கு வரியாக செலுத்தி உள்ளன.
1985-1986-வது நிதியாண்டு முதல் 2022-2023-வது நிதியாண்டு வரை வருமான வரியாக ரூ.4,577 கோடி மற்றும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரியாக சுமார் ரூ.600 கோடி வரியாக செலுத்தி உள்ளன. வருமானவரி சோதனையின்போது இந்த விவரங்களும் சோதனை அதிகாரிகளுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது குழும நிறுவனங்களும், அதன் தலைவர் மார்ட்டினும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், வருமானவரித் துறை சோதனை தொடர்பான உண்மைகளை மிகைப்படுத்தி, தவறாக சித்தரித்து மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்தியாக வெளியிடுவது அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் தெளிவுறும் வகையில் இந்த விளக்கத்தை தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.