நாமக்கல்: 3-வது பிரசவத்துக்கு வரும் ஏழைப் பெண்களை மூளைச் சலவை செய்து குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த புகாரில் இடைத்தரகர் லோகாம்பாள் மற்றும் அரசு பெண் மருத்துவர் அனுராதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.உமா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய எந்த வன்முறையையும், குற்றச் செயல்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
இச்சூழலில் எங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து ஒரு துருப்பு சீட்டு போல ஒரு தகவல் கிடைத்தது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர், மூன்றாவது பிரசவத்துக்காக வரும் பெண்களை மூளைச் சலவை செய்து குழந்தையை இடைத்தரகர்கள் மூலமாக விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டு உண்மை என்று கண்டறியப்பட்டது. கைதான பெண் மருத்துவர் கிளினிக் வைத்து நடத்துகிறார். அவர் மகப்பேறு மருத்துவர் என்பதால் மகப்பேறு, கருக் கலைப்பு சம்பந்தமாக அவரது கிளினிக்கை யாராவது அணுகி இருக்கலாம்.
தடயங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே திருச்செங்கோட்டில் உள்ள அவரது கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கைதான இடைத்தரகரிடம் விசாரணை நடத்தியதில் அரசு மருத்துவர் கருக் கலைப்பு செய்ய வந்த பெண்களை வற்புறுத்தி குழந்தை பெற வைத்து அந்த குழந்தையை விற்பனை செய்துள்ளார்.
மேலும், மூன்றாவது பிரசவத்திற்காக வரும் ஏழைப் பெண்ணை மூளை சலவை செய்து அக்குழந்தைகளை விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஊர்ஜிதமாகியுள்ளன. குழந்தையை தத்து கொடுப்பதற்கு ரத்த உறவாக இருக்க வேண்டும்.
கோட்டாட்சியரின் சான்றிதழ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருக்கும் போது அவற்றை மீறி இந்த அரசு மருத்துவர் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும், என்றார்.