தமிழகம்

முல்லைவேந்தன், கே.பி.ராமலிங்கத்தை நிரந்தரமாக நீக்க திமுக தலைமை திட்டம்: பழனி மாணிக்கம் உள்ளிட்டவர்களுக்கு மன்னிப்பு

ஹெச்.ஷேக் மைதீன்

திமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் முல்லை வேந்தன், இன்பசேகரன் மற்றும் கே.பி.ராமலிங்கம் எம்.பி. ஆகியோரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எதிரொலியாக, திமுகவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி நிர்வாக மாவட்டங்கள் 34-ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டன. 3 மாவட்டச் செயலாளர்கள், ஒரு எம்.பி. மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும் கட்சித் தலைமை உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது தர்மபுரி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, ஒன்றிணைந்த தர்மபுரி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக தர்மபுரி தோக்கம்பட்டியைச் சேர்ந்த தடங்கம் பெ.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றியச் செயலாளர்கள் தென்றல் செல்வராஜ் (பொள்ளாச்சி), கோழிக்கடை கணேசன் (வால்பாறை), சா.ராஜ மாணிக்கம் (குடிமங்கலம்), கே.எம்.சுந்தரம் (கவுண்டம்பாளையம்), டி.பி.சுப்பிரமணியம் (பெரிய நாயக்கன் பாளையம்), வசந்தம் கார்த்திகேயன் (தியாகதுருகம்), கனகு என்ற கனகராஜ் (மண்டபம்) ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து அந்தப் பொறுப்புகளில் மீண்டும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள் வருமாறு:

ஒழுங்கு நடவடிக்கை ரத்தா னவர்கள் அனைவரும், கட்சித் தலைமையின் நடவடிக்கையை எதிர்க்காமல், தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதேபோல், தஞ்சை மாவட்டச் செயலாளர் பழனி மாணிக்கமும் விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதம் அனுப்பியவர்களில் சிலர், தங்கள் மீது தவறு இருந்தால் மன்னிக்குமாறும் இனி பிரச்சினைகள் ஏற்படாமல் திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்பட கட்சியின் தலைமை முடிவுக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்தாகிறது. டி.ஆர்.பாலுவுக்கு அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆதரவாக இல்லை. மீத்தேன் மற்றும் மது தயாரிப்பு தொழிற்சாலை திட்டங்களால் அவருக்கு தஞ்சை தொகுதியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பாக உள்ளனர் என்றும் திமுக தலைமைக்கு விளக்கங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் பழனி மாணிக்கம் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்தாவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் டி.ஆர்.பாலுவுக்கு மாவட்டப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதால், பழனி மாணிக்கம் மீதான நடவடிக்கை ரத்து அறிவிப்பு தாமதமாவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அழகிரி ஆதரவாளராக கருதப்படும் முல்லைவேந்தன், எந்தக் கோஷ்டியையும் சேராத இன்பசேகரன் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முல்லைவேந்தன் தனது விளக்கக் கடிதத்திலும், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியிலும் ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனால், இனி அவரை கட்சியில் வைத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். இவ்வாறு திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT