சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள 38 மின்னுற்பத்தி மற்றும் விநியோக வட்டங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் மாநில தலைவர் எஸ்.மகேந்திரன், மாநில செயலாளர் சி.பாலசந்தர், பொருளாளர் என்.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து, பாலசந்தர் கூறும்போது, ‘‘தமிழ்நாடு மின்வாரியத்தில் 18,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் அரசு நேரடியாக ஊதியம் வழங்கி நிரந்தர ஒப்பந்தத் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.