சென்னை: வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவரின் வயிற்றில் இருந்து 8கிலோ கட்டி அகற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (47). இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில் கல்லீரலுக்கு கீழே பெரிய கட்டிஇருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, புற்றுநோயியல் துறை தலைவர் எஸ்.சுப்பையா தலைமையில் மருத்துவர்கள் ஜெகதீஷ் சிங், விஜயலட்சுமி, மயக்க மருத்துவர்கள் பிரணாப் நிர்மல், பால் பிரவீன், அபிநயா மற்றும் செவிலியர் ஷமிலி ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 8 கிலோ எடை கொண்ட கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளின் டீன் ஆர்.முத்துச்செல்வன் கூறியதாவது: இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், நோயாளி, பெரிய சுமையை இறக்கி வைத்ததைப் போல் உணர்கிறார். கட்டி பெரியதாக இருந்ததால், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய போதிய இடம் இல்லாமல் இருந்தது. ஆனாலும் ரத்த நாளங்கள் மற்றும் உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஒரு சவாலாக எடுத்து கட்டி அகற்றப்பட்டுள்ளது. கட்டியை அகற்ற ‘தாம்சன் பின்னிழுப்பமைப்பு’ கருவி பயன் படுத்தப்பட்டது.
இவ்வளவு பெரிய கட்டியை அகற்றாமல் இருந்திருந்தால் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆண்டுக்கு 14 ஆயிரம்புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். புற்றுநோயியல் மையம், மகளிர் மருத்துவம், தலை, கழுத்து, மார்பகம், தசைக்கூட்டு மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய்கள் கையாளப்படுகிறது. லேப்ராஸ்கோப்பி சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் இங்கு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.