பழநி: பழநியை அடுத்துள்ள பெருமாள்புதூர் அருகே பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், தற்காலிகப் பாதை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமத்தினர் 8 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழநியை அடுத்துள்ள பெரு மாள் புதூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இங்குள்ள மக்கள் பச்சையாற்றை கடந்துதான் கிராமத்துக்கு செல்ல வேண்டும். ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித் தால் ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, உயர்மட்ட பாலம் அமைக்க வேண் டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, தற்போது ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் ஆற்றை கிராமத்தினர் கடந்து செல்லும் வகையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பழநி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் (அக்.16) இரவு பெய்த மழையில் பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் தற்காலிக பாதை அடித்து செல்லப்பட்டது.
இதனால் புளியம்பட்டி, பாலாறு பகுதி வழியாக 8 கி.மீ. தூரம் சுற்றிக் கொண்டு நகர் பகுதிக்கு செல்கின்றனர். மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் சரியான நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.