தமிழகம்

நிதிச்சுமை இருந்தாலும் பெண்களின் சிரமத்தை குறைக்கவே ஸ்கூட்டர் திட்டம்: அமைச்சர் செல்லூர் ராஜு

செய்திப்பிரிவு

நிதிச்சுமை இருந்தாலும் பெண்களின் சிரமத்தை குறைக்கவே இரு சக்கர வாகனத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் அறிவித்திருந்தார். அதை நாங்கள் இப்போது நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தற்போது பெண்கள் ரயில்,பேருந்துகளில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். நிதிச்சுமை இருந்தாலும் பெண்களின் சிரமத்தை குறைக்கவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போல ஒரு திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இதுவரை இல்லை" என்றார்

2536 கோடியே 65 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் தமிழகத்தை காட்டிலும் மிக மிக குறைவான அளவிலேயே பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, "மற்ற மாநிலங்களில் ரேஷன் கடைகளில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT