தமிழகம்

கும்பகோணத்தில் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “கும்பகோணத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் மணிமண்டபம் அமைத்து, அங்கு அவரது செயல்பாடுகளைக் காட்சிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானதையொட்டி கும்பகோணத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பில் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலியும், புகழஞ்சலியும் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் வி.பழனியப்பன் தலைமை வகித்தார். விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்டா பாதுகாப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தர. விமலநாதன், முன்னாள் வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி, வேளாண் விஞ்ஞானி கோ.சித்தர், வேளாண்மை கல்லூரி முன்னாள் முதல்வர் பி.பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி, மவுன அஞ்சலியும், புகழஞ்சலியும் செலுத்தினர்.

தொடர்ந்து இயற்கை உரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை ஒரத்த நாடு வேளாண்மை கல்லூரிக்கு அவரது பெயரை சூட்டியுள்ளதற்கு வரவேற்கின்றோம். தொடர்ந்து அவரது ஆய்வுகளை மேற்கொள்கின்ற வகையில், அவர் பிறந்த கும்பகோணம் காவிரிக் கரையோரம் வேளாண்மைக்கு என ஆராய்ச்சி மையம் தொடங்குகின்ற வகையில் அவரது பெயரில் மணிமண்டபம் அமைத்து, அங்கு அவரது செயல்பாடுகளைக் காட்சிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அவர் போற்றி பாதுகாத்த விவசாயிகளுக்கு என லாபகரமான குறைந்த பட்ச ஆதார விலை வேண்டும் என அவர் முன்மொழிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அதனை மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியவில்லை. அவர் நினைவாக அதனை நிறைவேற்ற என வலியுறுத்துகிறேன்” என்றுபி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT