சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இல்லை எனக் கூறி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளின்படி பேருந்து நிலையம் அமைக்கப்படும் வரை, அதற்கு பணி முடிப்பு சான்று வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும், விதிகளின்படி பேருந்து நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் பேருந்து நிலையம் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளின்படி அமைக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், "கிளாம்பாக்கத்தில் செப்டம்பர் 15ம் தேதி கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தின் தளம் வழுக்கும் தன்மையுடன் அமைந்துள்ளது. அதேபோல், சக்கர நாற்காலியில் வரும் பயணிகளுக்காக பேருந்து நிற்கும் பகுதியில் சாய்வுதளம் அமைக்கப்படவில்லை" என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, கூட்டு ஆய்வுக்குழு அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என விளக்கம் அளித்தார். இதையடுத்து நவம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.