தமிழகம்

8 பேருந்துகளை மட்டுமே நிறுத்தும் நிலை: பெரியபாளையம் பேருந்து நிலையம் விரிவாக்கம் எப்போது?

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது பெரியபாளையம். பிரசித்திப் பெற்ற பவானி அம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது. ஊராட்சியாக இருந்தாலும் சிறுநகரமாக வளர்ந்து வருகிறது பெரியபாளையம். பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் பெரியபாளையம் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், பெரியபாளையம் பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 8 பேருந்துகளை மட்டுமே நிறுத்தும் அளவுக்குத்தான் வசதி உள்ளது. குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அருள் தெரிவித்ததாவது: இப்பேருந்து நிலையத்தில் இருந்தும், பேருந்து நிலையம் வழியாகவும் 140-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆவடி, செங்குன்றம், சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

ஆனால், அந்த பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் நின்று செல்ல முடியாத நிலை உள்ளது. அனுமதியில்லாத வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட காரணங்களால் பேருந்து நிலையம் சுமார் அரை ஏக்கராக குறுகிவிட்டது. இதனால், தற்போது ஒரே நேரத்தில் 8 பேருந்துகளை மட்டுமே நிறுத்துவதற்கான இட வசதி உள்ளது. மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகள் மட்டுமே பெருமளவில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றன.

ஊத்துக்கோட்டை, ஆரணி, செங்குன்றம், சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள், பேருந்து நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால், நாள் தோறும், சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பக்தர்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அல்லது போதிய இடவசதி உள்ள வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "குறுகிய இடத்தில் உள்ள பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, அதனை விரிவாக்கம் செய்ய அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT