உடுமலை: உடுமலை அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைஅருகே கொழுமம் கிராமம் உள்ளது.அங்குள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகே சாவடி உள்ளது. நேற்று காலை 8 மணியளவில் மழை பெய்த காரணத்தால், அதேபகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் முரளிராஜா(35), மணிகண்டன்(28), கவுதம்(29) ஆகியோர் பேருந்துக்காக சாவடி மேற்கூரையின் அடியில் நின்றிருந்தபோது எதிர்பாராத விதமாக மேற்கூரை சரிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்பு: அங்கிருந்த பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கான்கிரீட் கூரையைத் தூக்கி அதன் அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இச் சம்பவத்தில் இருவர்அதே இடத்திலும், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இத்தகவல் அறிந்த போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதபரிசோதனை முடிந்து உடல்கள்உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் த.கிறிஸ்துராஜ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறு தல் கூறினார்.
தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்