சேலத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. குரங்குச்சாவடி பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். படம்: எஸ். குரு பிரசாத் 
தமிழகம்

சேலத்தில் கொட்டித் தீர்த்தது மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாநகரில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காட்டில் கடும் குளிர், பனி மூட்டத்தால் மக்கள் அவதிப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பெய்த மழை இரவு 7 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால், சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன், கொண்டலாம்பட்டி, கோரிமேடு உள்பட நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும், அதிகப்படியான மழை காரணமாக பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி, மழை நீருடன் கலந்து சுகாதார சீர்கேட்டுடன் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக சேலம் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஏற்காட்டில் நேற்று மாலை பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும், பனி மூட்டமும் அதிகமாக இருப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சாலைகளில் சென்றனர். மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை மிகவும் குறைந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக தலைவாசலில் 17 மி.மீ. மழை பெய்தது. கரியகோவில், பெத்த நாயக்கன்பாளையத்தில் தலா 5 மி.மீ., ஆனைமடுவு 4 மி.மீ. மழை பெய்துள்ளது.

SCROLL FOR NEXT