திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 2018-ல் மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதிக் கொண்ட வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 14 பேர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 6-ல் நேற்று ஆஜராகினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: திருச்செங்கோட்டில் மருத்துவர் குழந்தை விற்ற சம்பவம் தமிழகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. மருத்துவர்கள் மீது எப்போதும் மதிப்பு மரியாதை உண்டு. ஆனாலும் மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மீது எனக்கு விமர்சனம் உள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடம் போடுகின்றன.
தமிழகத்தில் போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், வட மாநிலத்தவருக்கு அது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அந்தந்த மாநில மக்களுக்கு அந்தந்த மாநில தேர்வில், பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மகளிர் உரிமை குறித்து பேசும் திமுக, மகளிருக்காக எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.