திருச்சி: தெற்கு ரயில்வேக்குட்பட்ட அனைத்து ரயில் வழித்தடங்களும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு, அவற்றை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி கோட்டத்தை பொறுத்தவரை 90 சதவீத வழித் தடங்களில் மின்மயமாக்கல் பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி திருவாரூர் - காரைக்குடி ஆகிய 2 அகல ரயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.166 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, திருச்சி ரயில்வே கோட்டத்தில் டீசல் எனர்ஜியை குறைக்க அனைத்து ரயில்களையும் மெமு ரயில்களாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதையொட்டி திருச்சி - தஞ்சாவூர் வழித் தடத்தில் உள்ள மஞ்சள் திடல் பகுதியில் ரூ. 55 கோடி மதிப்பில் மெமு ரயில்களின் பராமரிப்பு பணிக்கு முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்மயமாக்கல் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள வழித்தடங்களில் இயங்கும் ஒரு விரைவு ரயில் மற்றும் 3 டெமு ரயில்கள் நவ.1-ம் தேதி முதல் மெமு (மின்சாரத்தில் இயங்கும்) ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்படவுள்ளன என திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாலக்காடு - திருச்சி - பாலக்காடு (16844 /16843) விரைவு ரயில், டெமு ரயில்களான வேளாங்கண்ணி - திருச்சி - வேளாங்கண்ணி ( 06840 /06849), நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் (06841/ 06842), காரைக்கால் - நாகப்பட்டினம் - காரைக்கால் (06897/ 06898) ஆகிய 4 ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றப்படுகின்றன.
இது குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள், `இந்து தமிழ்'நாளிதழிடம் கூறியது: திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிகமாக கிராமப் பகுதிகளை கொண்டுள்ள டெல்டா மாவட்ட மக்களின் பயன்பாட்டை கருதி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மெயின் லயன் பகுதியில் சில கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.
மெமு ரயில்கள் சாதாரண ரயில்களை விட விரைவாக இயங்கும் என்பதால், பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது சாதாரண பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் பயணிகள் ரயில்களும், டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட டெமு வகை ரயில் வண்டிகளும் படிப்படியாக மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டிகளாக (மெமு ரயில்கள்) இயக்கப்படும் என்றார்.