சென்னை: திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் அனுராதா கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் அனுராதாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டையில், கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண உதவிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.16) வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "திருச்செங்கோடு மருத்துவமனையில் குழந்தை விற்கப்படுகிறது என்ற அரசல் புரசலான செய்தி பரவியது, அதாவது ஒரு பெண் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, மூன்றாவதாக பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களது ஏழ்மை நிலையினை கருதி அவர்களுக்கு ஆசை காட்டி, ஆண் குழந்தை என்றால் ரூ.5000 என்றும், பெண் குழந்தைகளாக இருந்தால் ரூ.3000 என்றும் விற்பதற்கான பணிகளை தரகர்கள் செய்கிறார்கள் என்ற செய்தி பரவியது.
இந்த செய்தி வந்தவுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா , சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்களோடு ஐந்து நாட்களாக ரகசிய விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். அப்படி விசாரணை மேற்கொண்டதில் மிக நீண்ட வருடங்களாக லோகம்பாள் என்ற பெண் இடைத்தரகராக இந்த பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. காவல் துறை அதிகாரிகள் அந்த இடைத்தரகரின் சொந்த கிராமத்துக்கு சென்று ஐந்து நாட்களாக விசாரணை செய்தார்கள்.
கடைசியாக சனிக்கிழமை அந்த பெண்ணிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை செய்திருக்கிறார்கள். அதில் அவர் குழந்தைகளை விற்பது உண்மை என்று தெரிவித்திருக்கிறார். அவர் குழந்தைகளை திருடி விற்கவில்லை, தாய்மார்களின் ஏழ்மை நிலையினை காரணமாக அவர்களுக்கு ஆசை காட்டி அவர்களுக்கு பிறந்த 3வது குழந்தைகளை வேறு யாருக்காவது விற்று தரும் வேலையை செய்திருக்கிறார். இந்த சம்பவங்களுக்கு மருத்துவர் அனுராதா என்ற மகப்பேறு மருத்துவர் உடந்தையாக இருந்திருக்கிறார். இம்மருத்துவர் அதற்கு உடந்தையாக இருந்ததால் பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திருச்செங்கோடு மருத்துவமனையில் மட்டுமே இந்த சம்பவம் நடந்துள்ளதா? அல்லது இதில் பெரிய அளவில் ஏதாவது குழு ஒன்று செயல்பட்டு வருகிறா? என்று விசாரணை மேற்கொள்ள சொல்லியிருக்கிறோம். மேலும் இவர்கள் இரண்டு பேரை தீவிரமாக விசாரணை செய்ததில் சிறுநீரகம் விற்பனையும் கூட நடந்துள்ளதாக தெரியவருகிறது. எனவே அதனையும்கூட தீவிர விசாரணை செய்வதற்கு காவல்துறை உயர் அலுவலர்களையும், மருத்துவத்துறை அலுவலர்களுடன் இணைந்து ஒரு குழு அமைத்து தீவிரமாக விசாரணை செய்ய சொல்லியிருக்கிறோம்.
இந்த விசாரணைகளுக்குப் பிறகு இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று முழுமையாக கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவர் அனுராதாவும், லோகாம்பாள் என்பவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில், தமிழகம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக திகழ்கிறது. பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் எந்தவிதமான குற்றங்கள் இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று கூறியுள்ளார்.
எனவே மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநரிடம் மருத்துவர் அனுராதா என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.