சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை கோட்டை நிலையத்தில் நடைமேடை மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியும் பூங்காநகர் ரயில் நிலையத்தில் நடைமேடை அகற்றும் பணியும் நடைபெற்று வருகின்றன. 
தமிழகம்

எழும்பூர் - கடற்கரை 4-வது ரயில் பாதை திட்டம்: கோட்டை, பூங்காநகர் நிலையத்தில் ஆரம்ப கட்டப்பணி மும்முரம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர்-கடற்கரை 4-வது பாதை திட்டத்தில் ஆரம்பக் கட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளன. கோட்டை, பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைகள், நடைமேம்பாலம் அகற்றும் பணி நடைபெறுகிறது.

சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே தற்போது 2 பாதைகளில் புறநகர் ரயில்களும், ஒருபாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே, சென்னை எழும்பூர்-கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரூ.280 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க ரயில்வேவாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, நடப்பு பட்ஜெட்டிலும் ரூ.96.70கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தை விரைந்துமுடிக்க உத்தரவிட்டது.

இருப்பினும், நிலப்பிரச்சினை உள்பட சில காரணங்களால் தாமதமாகியது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டநிலையில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி கடந்தஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. அதன்படி, பூங்காநகர் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் புள், பழைய தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எழும்பூர்-கடற்கரை 4-வது பாதை அமைப்பதற்காக ஆரம்பக்கட்டபணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோட்டை, பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் பறக்கும் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டது. 2 ரயில் நிலையங்களில் நடைமேடை சுவர் இடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

கோட்டை ரயில்நிலையத்தில் 3,4,5-வது நடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியும், பூங்கா நகர் நிலையத்தில் கட்டிடம் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், கூவம் ஆற்றை ஒட்டி, பூமிக்கடியில் கம்பிகள் மூலமாக அடித்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்தபிறகு, அடுத்த கட்ட பணி வரும் மாதங்களில் தொடங்கும்.

எழும்பூர்-கடற்கரை 4-வது பாதை திட்டப் பணியை 7 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். 4-வது பாதை அமைப்பதன் மூலம் தென்பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT