சென்னை: மருத்துவர் ராமமூர்த்தியை போன்ற மனிதாபிமான மருத்துவசமுதாயம் உருவாக உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் வெளியிட்டுள்ள வாழ்த்துரை: நரம்பியல் அறுவை சிகிச்சைநிபுணர் மருத்துவர் பி.ராமமூர்த்திநூற்றாண்டு விழா கொண்டாடுவதும், அதற்காக மிகச் சிறப்பானநினைவுத்தொகுப்பு வெளியிடப்படுவதும் மகிழ்ச்சிக்குரியது. அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நீண்டகால நட்பு உண்டு.
நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா சட்டத்தின்கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக அனுமதி பெற்று வந்தவர்தான் மருத்துவர் ராமமூர்த்தி. எனது உடல்நிலையை கவனித்துக் கொண்டவர்.
மருத்துவ உலகத்தை கடந்து, அவருக்கு சமூக ஆர்வமும், நாட்டு மக்கள் மீதான அக்கறையும் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் அதிவேக பயணத்தின்காரணமாக பெரும் விபத்தையும்,உயிரிழப்பையும் சந்தித்து வருவதை அறிந்து, தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கே வந்து வாதாடினார்.
எதையும் கட்டாயமாக்கினால் கெட்டப் பெயர் வந்துவிடும், உள்நோக்கம் கற்பிப்பார்கள் என்றுகருணாநிதி அதன் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்னார்கள். மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று வலியுறுத்தியவர் மருத்துவர் ராமமூர்த்தி. அந்த இடத்தில் மருத்துவர் என்பதை கடந்து மனிதாபிமான காவலராக அவர் காட்சியளித்தார்.
உயிர்காக்கும் துறையான மருத்துவத் துறையில், நரம்பியல் துறை வல்லுநராக, இந்தியாவின் முகமாகவே உலகம் முழுவதும் அறியப்பட்ட சிறப்புக்குரியவர் மருத்துவர் ராமமூர்த்தி. இந்திய நரம்பியல் அறுவை சிகிச்சை இயலின் தந்தை என்றே போற்றப்பட்டவர்.
நரம்பியல் துறையிலும், தலைப்பகுதியில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவிலும் பலமுன்னெடுப்புகளை நிகழ்த்தியுள்ளார். புதிய பிரிவுகளை நிறுவியுள்ளார். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்திய குடியரசுத் தலைவர்களாக இருந்த ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி ஆகியோராலும், இந்தியப் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோராலும் மதிக்கப்பட்ட ஆளுமையாக இருந்துள்ளார்.
மருத்துவர் ராமமூர்த்தியின் நூற்றாண்டில் அவரது வாழ்வும் பணியும் சிறப்பான முறையில் நினைவுகூரப்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் போன்ற மனிதாபிமான மருத்துவசமுதாயம் உருவாக உறுதியேற்போம் என்றார்.