வத்திராயிருப்பு: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வத்திராயிருப்பு பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 27.40 அடியாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் நெல், வாழை, தென்னை, மா ஆகியவை நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து இன்றி வறண்டது.
இதனால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் மலையடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது. ராஜபாளையம் அருகே அய்யனார் கோயில் ஆறு,
ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மீன்வெட்டிப்பாறை நீர்வீழ்ச்சி, பேயனாறு, கான்சாபுரம் அத்திக்கோயில் ஆறு மற்றும் மலைப் பகுதியில் உற்பத்தியாகும் பல்வேறு ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. ராஜபாளையம் அய்யனார் கோயில், கான்சாபுரம் அத்திக்கோயில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சராசரியாக 145 கனஅடி வீதம் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
இதனால் 47.56 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் சில மணி நேரங்களிலேயே 3 அடி உயர்ந்து 27.40 அடியானது. இதனால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் முதல்போக சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.