திருவண்ணாமலை: திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டத்துக்கு செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு எதிராக செயல்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் ஒன்றிய செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச் சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி யின் முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் ‘கீரியும்... பாம்பும்’ போல் வலம் வரு கின்றனர். அதிமுக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், அனைத்து நிலை தேர்தல்களில் இருவரும், எதிரும் புதிருமாகவே செயல்படு கின்றனர். இதன் எதிரொலியாக, கடந்த 4 ஆண்டுக்கு முன்பு, மாவட்ட எல்லை வரையறை செய் யப்பட்டன.
இருவரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அதிமுக தலைமை, ‘தெற்கு மாவட்டத்தில் இருந்த கலசப்பாக்கம் சட்டப் பேரவை தொகுதியை வடக்கு மாவட்டத்திலும், வடக்கு மாவட்டத்தில் இருந்த போளூர் சட்டப்பேரவை தொகுதியை தெற்கு மாவட்டத்திலும் இணைத்தது. பின்னர் தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளராக எம்எல்ஏ பதவியில் இருந்த பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்.
தொகுதி வரையறை மூலம் கோஷ்டி அரசியலால் அதிமுக தலைமைக்கு நீடித்து வந்த குழப்பம் தீர்ந்தது. ஆனால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தின் வெளிப்பாடாக, கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியை கடந்த தேர்தலில் எளிதாக திமுக கைப்பற்றியது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 2 சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மாவட்ட செய லாளர் என்ற புதிய விதியை அதிமுக தலைமை அறிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 மாவட்ட அதிமுக செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். கலசப்பாக்கம், செங்கம் சட்டப்பேரவை தொகுதியை உள்ளடக்கி அதிமுக தெற்கு மாவட்டம் என அறிவிப்பு வெளியானது. இதன் மாவட்ட செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பு ஒன்றிய செயலாளராக பதவி வகித்த முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு கடந்த 1-ம் தேதி நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியை கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமொழி ஆகி யோர் புறக்கணித்தனர்.
மேலும் அவர்களது ஆதரவாளர்களும் புறக் கணித்தனர். இவர்கள் இருவரது எதிர்ப்பு, புதிதாக நியமிக்கப்பட்ட தெற்கு மாவட்ட செயலாளரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, எதிர்காலத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என பரவலாக பேசப் பட்டன. இதனால், 2 பேரும் ஒன்றிய செயலாளர்கள் பதவியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவர் என அதிமுகவினர் வெளிப் படையாகவே பேசியதை கேட்க முடிந்தது.
இதை உணர்ந்த இருவரும், ஒன்றிய செயலாளர்கள் பதவிகளில் இருந்து விலக ஆயத்தமாகினர். இதன் எதிரொலியாக, கலசப் பாக்கம் ஒன்றிய செயலாளர்களாக பதவி வகித்து வந்த முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் (கிழக்கு) மற்றும் பொய்யாமொழி (மேற்கு) ஆகியோரை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அதிரடியாக நேற்று முன்தினம் நீக்கி உள்ளார்.
கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர்களாக கே.சி.கிருஷ்ண மூர்த்தி (கிழக்கு), எஸ்.கோவிந்தராஜ் (மேற்கு) ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும், தெற்கு மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் தீவிர ஆதரவாளர்கள். மேலும், பதவியில் இருந்து வெளியேற்றப் பட்டவர்களுக்கு மாநில அணிகளில் பதவி வழங்கி, கோபத்தை தணித்துள்ளது தலைமை என்கின்றனர் அதிமுகவினர் .
இது குறித்து மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் நெருங் கிய ஆதரவாளர்கள் கூறும்போது, ‘கட்சியின் வளர்ச்சிக்காக சில மாற்றங்கள் செய்வது இயல்பு தான்’ என்றனர். முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு, பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களின் அடுத்தக்கட்ட செயல்பாடு எவ்வாறு இருக்கும் என கேட்டபோது, பின்னர் பேசுவதாக தெரிவித்தவர், அதன்பிறகு கைபேசி அழைப்பை ஏற்கவில்லை.