போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் எஸ்.தணிகாசலம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரபல இதய மருத்துவர் டாக்டர் ஜார்ஜ் செரியன் பேசியதாவது:
இதய நோயாளிகளுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மற் றும் மித்ரல் அல்லது அயோர்டிக் வால்வுகள் சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் செய்த பின்பு மூவிதழ் வால்வ் (அசுத்த ரத்தம் செல்லும் இதயத்தின் வலது புறத்தில் உள்ள மேல், கீழ் அறைகளை இணைக்கும் வால்வு) பிரச்சினைகளால் தொடர்ந்து சிக்கல் ஏற்படலாம்.
நோயாளியை நேரடியாக பரிசோதனை செய்யும்போது புலப்படாத பிரச்சினையாக இது உள்ளது. பிரேதப் பரிசோதனையின்போது செய்யப்பட்ட பல பன்னாட்டு ஆய்வுகளில் இதய செயல்பாடு இழப்புக்கு மூவிதழ் வால்வின் செயல்பாடு முக்கிய காரணமாக அறியப்பட்டுள்ளது என்றார். கடந்த 50 ஆண்டுகளில்தான் அளித்த சிகிச்சைகள் குறித்து இளம் இதய மருத்துவர்களுக்கு அவர் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவ சேவைகளின் இயக்குநர் டாக்டர் கே.ஏ.ஆப்ரஹாம், ஸ்ரீ ராமச்சந்திரா முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜேஎஸ்என் மூர்த்தி, துணைவேந்தர் டாக்டர் பி.வி. விஜயராகவன், பலதுறை தலைவர் டாக்டர் மகேஷ் வக்கமுடி, இதய நலத்துறை தலைவர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.