பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் வாகனங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு சென்ற மழைநீர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

ஒருநாள் மழைக்கே தாங்காத மதுரை - மழைநீர் வடிகால் வசதியின்றி ஆறுகளாக மாறும் சாலைகள்!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஒரு நாள் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், மதுரை மாநகரின் அனைத்து சாலைகளிலும் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால், கார், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.

கடந்த 3 ஆண்டுகளாக, மதுரை மாவட்டத்தில் கோடை மழை, தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை மற்றும் பருவம் தவறிய மழை பெய்தது. அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீர் தட்டுப்பாடின்றி குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களாக மதுரை மாவட்டத்தில் கனமழை ஏதும் பெய்யவில்லை.

இதனால் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கொண்டிருந்தன. இந்நிலையில், வட கிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, நேற்று முன்தினம் மாலை 6 முதல் இரவு 11 மணிக்கு மேல் வரை மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ச்சியாக கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

கார், இரு சக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு சாலைகளில் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். பலரது வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி செயலிழந்தன. சிலர் வாகனத்துடன் கீழே விழுந்து காயமடைந்தனர்.

கோ.புதூர், பெரியார் பேருந்து நிலையம், கே.கே.நகர், அழகர்கோவில் செல்லும் சாலை, தமுக்கம், கோரிப்பாளையம், செல்லூர், பைபாஸ் சாலை, நத்தம் சாலை, மாசி வீதிகள், வெளி வீதிகள், மீனாட்சியம்மன் கோயில் பகுதிகள், சிம்மக்கல், பழங்காநத்தம் சாலை, டிவிஎஸ் நகர் உள்ளிட்ட மதுரை மாநகரின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தெப்பம்போல் தேங்கியது.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடங்கும் போது மழை பெய்தால், தண்ணீர் நகர்பகுதியில் தேங்காமல் வழிந்தோடும் வகையில் மீனாட்சிம்மன் கோயில் பகுதியில் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும் என, மாநகராட்சி உறுதியளித்திருந்தது. ஆனால், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சாலையை மட்டும் அமைத்து விட்டு, கழிவு நீர் கால்வாய், மழை நீர் கால்வாய்களை ஒழுங்குபடுத்தாமல் சென்றுவிட்டனர்.

இதனால் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், சித்திரை வீதிகள், வெளி வீதிகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கே.கே.நகர், செல்லூர், ஆரப்பாளையம், தத்தனேரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மழைநீர் சென்று வைகை ஆற்றில் கலக்கும். ஆனால், தற்போது வைகை ஆற்றின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரால்,

மழைநீர் வைகை ஆற்றில் சென்று கலக்க வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி விடுகிறது. இதனால், ஒரு நாள் மழைக்கே மதுரை மாநகர் தாங்காமல் ஸ்தம்பிக்கிறது. எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் கால்வாய்கள், வைகை ஆற்றின் நீர்வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், குளங்களை தூர்வாரி தயாராக வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மி.மீட்டரில்): மதுரை விமான நிலையம் - 51.20, விரகனூர் - 52.50, மதுரை நகர் - 120.80, சிட்டம்பட்டி - 10.40, இடையபட்டி - 12.40, கள்ளந்திரி - 38.20,

மேலூர் - 8, புலிப்பட்டி - 16.80, தனியாமங்கலம் - 15, சாத்தையாறு அணை - 78, மேட்டுப்பட்டி - 96.40, ஆண்டிப்பட்டி - 40, சோழவந்தான் - 17.50, வாடிப்பட்டி - 50, உசிலம்பட்டி - 8, குப்பணம்பட்டி - 10, கள்ளிக்குடி - 50.60, திருமங்கலம் - 44.60, பேரையூர் - 13.60, எழுமலை - 18.80, பெரியபட்டி - 85.

SCROLL FOR NEXT