தமிழகம்

தருமபுரியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - குடிநீரை காய்ச்சிப் பருக அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்புக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை செயல்படும் சிறியதும், பெரியதுமான தனியார் மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக் காலம் என்பதாலும், குளிர்ச்சியான கால நிலை நிலவுவதாலும் தொற்று நோய்களான காய்ச்சல், சளி பாதிப்புகள் பலரையும் பாதித்து வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மழைக் காலத்தில் வேகமெடுக்கக் கூடிய சில நோய்களை பரப்பும் வைரஸ்கள் சூழல் காரணமாக பல்கிப் பெருகுவதால் பலரும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்த சிரமங்களை தவிர்க்க, குடிநீரை காய்ச்சிய பிறகே பருக வேண்டும். மேலும், முடிந்தவரை சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்து முறைகளில் பயணிக்கும் போதும் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும். அதேபோல, நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக, நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு, இருப்பிடத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதே முக்கிய காரணமாக இருக்கிறது.

எனவே, முடிந்தவரை அதற்கு இடமளிக்காமல் சுற்றுப் புறத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் சுயமாக சிகிச்சை பெறுவதை தவிர்த்து மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT