சென்னை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021-ம் ஆண்டுநவ.10-ம் தேதியிட்ட நடவடிக்கையின் மூலம், தென்னை நார் உடைத்தல், பிரித்தெடுத்தல், பதப்படுத்துதல் போன்ற பணிகளைமேற்கொள்ளும் தொழிற்சாலைகளை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது.
இதற்கிடையே, தென்னை நார் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பல்வேறு சங்கங்கள், மேற்கண்ட நடவடிக்கையை திரும்பப் பெற்று, தென்னை நார்தொழிற்சாலைகளையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கைகளை சமர்ப்பித்தன.
இதையடுத்து, தென்னை நார் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்திக்காக எம்எஸ்எம்இ தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்கும், தென்னை நார் தொழிற்சாலைகளை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்திய வாரியத்தின் நடவடிக்கை திரும்பப் பெறப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.