உமராபாத் பெண் காவல் ஆய்வாளர் யுவராணி. 
தமிழகம்

பணியில் மெத்தனம் - பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் @ திருப்பத்தூர்

ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியில் மெத்தனமாக இருந்த உமராபாத் பெண் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. 19 காவல் நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் என மொத்தம் 22 காவல் நிலையங்கள் உள்ளன. போக்குவரத்து காவல் நிலையங்களை தவிர்த்து, 19 காவல் நிலையங்களில் 11 காவல் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 930 காவலர்கள் பணியில் உள்ளனர்.

ஆட்கள் பற்றாக்குறையால் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஏற்கெனவே திணறி வரும் நிலையில், பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி கடந்த 4 நாட்களில் 3 பெண் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை. அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் உட்பட 2 பேர் பாலியல் தொந்தரவு செய்த வழக்கை துரிதமாக விசாரணை நடத்தாமல், கிராம பஞ்சாயத்தில் பேசி தீர்க்க காரணமாக இருந்ததாக கூறி வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் சாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

அவரது இடத்துக்கு நாட்றாம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மலருக்கு கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டது. இதற்கிடையே, பெண் காவல் ஆய்வாளர் மலர் மீது சென்னை ஐஜி அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராக மலர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவர் தனது பணிகளை சரிவர செய்யாமல், தனிப்பட்ட நபர்களுக்கு ஆதரவாகவும், வழக்கு விசாரணையை சரிவர மேற்கொள்ளாமல் மெத்தன போக்குடன் இருந்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மலரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சென்னை ஐஜி அலுவலகம் உத்தரவிட்டது. அடுத்தடுத்து 2 பெண் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சலசலப்பு அடங்குவதற்கு முன்பாகவே மேலும் ஒரு பெண் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

ஆம்பூர் அருகே பெண் கடத்தப்பட்ட வழக்கில் துரித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்த உமராபாத் பெண் காவல் ஆய்வாளர் யுவராணி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் மேலும் பல காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் அடிப்பட்டு வருவதாகவும், அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கூறும் போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சட்டம் - ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில், புகார்தாரர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, பெண் குழந்தைகள், பெண் கடத்தல், போக்சோ பாலியல் போன்ற புகார்கள் மீது காவல் துறையினர் பார பட்சம் இல்லாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு சர்ச்சையிலும் காவல் துறையினர் சிக்கக் கூடாது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கான தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.

இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் ஏற்கெனவே எச்சரித்துள்ளேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பெண் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்க காரணம், அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை.

புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தாமல் மெத்தன போக்குடன் இருந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். எனவே, காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் தங்களிடம் வரும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் சமரசம் செய்யக்கூடாது. பஞ்சாயத்து பேசக்கூடாது. மீறினால் இது போன்ற நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

வேலூர் சரக டிஐஜியின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த காவலர்களும் பீதியில் உள்ளனர்.

SCROLL FOR NEXT