தமிழகம்

சென்னையில் திமுக மகளிரணி மாநாடு; சோனியா, பிரியங்காவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு: கே.எஸ்.அழகிரி ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அவர்களை வரவேற்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் வரும் 14-ம் தேதிதிமுக மகளிரணி மாநாடு நடைபெறஉள்ளது. அதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க சென்னை வருகின்றனர். அவர்களை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்வது குறித்து குறித்து விவாதிக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மிகப்பெரிய இன அழிப்பை அவர்கள் செய்து வருகிறார்கள். இதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

காவிரி பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது நாங்கள்தான். கர்நாடக காங்கிரஸ் அரசு உரிய நீரை வழங்காததை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டித்தது. காங்கிரஸ் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு எதிராக தான் போராட்டம் நடத்த வேண்டும். கர்நாடக அரசு 16 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட்டது. அதை எதிர்த்து கலவரம் ஏற்பட்டது. அதை ஆதரித்து பேசியவர்கள் எடியூரப்பாவும், பசவராஜ் பொம்மையும்தான். அவர்களை தமிழக பாஜக எதிர்க்கவில்லை. தமிழக பாஜகவுக்கு காவிரி நீர் பெறுவது முக்கியமில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசையும், தமிழக திமுக அரசையும் துன்புறுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.

பாஜகவினர் யாரும் உத்தமபுத்திரர்கள் இல்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் ஒன்றில்கூட வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்துவதில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தான் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT