கடலூர்: காவிரியில், கர்நாடக அரசு தண்ணீர் திறக்கக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப் பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரை கூட தடுக்கும் கர்நாடக அரசைகண்டித்தும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தவும், டெல்டா பகுதிகளான சிதம்பரம்,
புவனகிரி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, ஆகிய பகுதிகளில் முழுமையான கடையடைப்பை நடத்துவது என்றும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் அமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று சிதம்பரம் பகுதியில் காய்கறி மார்க்கெட், நகைக் கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட சுமார் 50 சதவீத கடைகள் அடைக்கப்படிருந்தன.
இது போல காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் முழு கடையடைப்பு நடந்தது. சேத்தியாத்தோப்பு, புவனகிரியில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சிதம்பரம் நகரில், காவிரி படுகை கூட்டியக்க விவசாயிகள் அமைப்பு பிரதிநிதிகள் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த மூசா, மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகர செயலாளர் ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, மார்க்சிஸ்ட் விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சி நாதன்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட்) சேகர், தமிமுன் அன்சாரி, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்க தலைவர் கண்ணன், துணை செயலாளர் காஜா மொய்தீன், திராவிடர் கழகம் அன்பு சித்தார்த்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிதம்பரம் மேலரத வீதியில் திறந்து இருந்த கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தி, ஊர்வலமாக சென்றனர்.
இதையடுத்து மேலர வீதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். பின்னர், காவிரி படுகை கூட்டியக்க விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் ஊர்வலமாக சென்று சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்துக்கு திமுக ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளரும் பேரூராட்சி தலைவருமான கணேசமூர்த்தி, காவிரி விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், தமிழ்நாடு பனை மர நல வாரிய உறுப்பினர் பசுமை வளவன், ரெங்க நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஊர்வலமாக நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக அரசுக்கு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அதன் பிறகு தபால் அலுவலகத்தின் நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.