தமிழகம்

பொதுமக்கள் பாதிப்பை உணர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளும், போக்குவரத்து ஊழியர்களும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

போக்குவரத்து துறை ஊழியர்களின் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய முதல்வர் பழனிசாமி, "எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்கள் அனுபவம் மிக்கவர். ஆகவே எப்படி எப்படியோ பேசி ஒரு தவறான கருத்தை இங்கே பதிய வைத்திருக்கிறார். என்னவென்றால், முதலமைச்சருக்கு ஆர்வம் இல்லையா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். அது தவறு. "முதலமைச்சர் ஏன் முன்வரவில்லை" என்ற ஒருகேள்வியை கேட்டிருக்கிறார்.

ஏற்கெனவே நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசிய போது, என்னுடன் பேசிவிட்டு சென்று தான்; எங்களுடைய கருத்தின் அடிப்படையிலே தான் அங்கே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதாவது, முதலமைச்சர் சொல்லித்தான் அவர் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தந்தார். ஆகவே, முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்வது தவறானது.

முதலமைச்சர் என்ற முறையில் ஊழியர்களை மதிக்கக்கூடியவன், உழைப்பவர்களை மதிக்கக்கூடியவன், ஆகவே தான் 11 முறை போக்குவரத்துத் துறை அமைச்சரை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவு எடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ஒரு சுமுகமான நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதைத்தான் நாங்களும் எங்கள் தரப்பில் இருந்து தெரிவித்திருக்கிறோம். ஆகவே, எதிர்க்கட்சி தலைவர் அவர்களும், துணைத் தலைவரும் இதை நன்கு ஆலோசனை செய்து, இருக்கின்ற நிதிநிலைமை, போக்குவரத்து கழகத்தின் நிதிநிலைமை நன்றாக உங்களுக்கு தெரியும்.

ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது நியாயமல்ல. ஏனென்றால், தற்போது இருக்கின்ற நிலைமை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உங்களுடைய ஆட்சியிலேயே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 922 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, அதனுடைய நிதிநிலைமை உங்களுக்கு நன்றாக தெரியும்.

ஆகவே, இதையெல்லாம் உணர்ந்து தான் தற்போது இருக்கினற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நான் தற்போது 2.44 மடங்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து அதை அறிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் என்னுடைய நிலைபாடு. ஆகவே,  எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், உறுப்பினர்களும் உதவிகரமாக இருக்க வேண்டும்.

வேலை நிறுத்தத்திலே ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஏனென்றால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே தெரிவித்திருக்கிறார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே இரண்டு முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

அதை எல்லாம் மதித்து, இருக்கின்ற நிலைமை உணர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யக் கூடிய நிறுவனமாக போக்குவரத்து கழகம் இருக்கின்ற காரணத்தினாலே,  எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப்போல மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் உணர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்லி, பிரதிநிதிகளும், அதோடு போக்குவரத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு முதல்வர் பேசினார்.

SCROLL FOR NEXT