கோவில்பட்டி: விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரசக்கனாபுரம் ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. நடிகர் விஷால் நடிக்கும் ‘விஷால் 34’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குமாரசக்கனாபுரம் பகுதியில் கடந்த மாதம் நடந்தது.
அப்போது கண்மாயில் பணியாற்றிக் கொண்டிருந்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை சந்தித்து விஷால் பேசியுள்ளார். குமாரசக்கனாபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிகர் விஷால் ஏற்பாட்டில் அவரது ரசிகர் மன்றத்தினர் நேரில் வந்து,
கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் இணைப்பு மற்றும் தலா 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகள் சுமார் ரூ.2 லட்சம் செலவில் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி தலைவர் பி.ராமகிருஷ்ணன் கூறும்போது, “கிராம மக்களின் கோரிக்கையை கேட்ட விஷால் ’நான் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கலாமா’ எனக் கேட்டார். மக்களுக்கு நல்லது நடக்கிறது என்பதால் சரி என்றோம். அதன் பின்னர் பணிகள் நடந்துள்ளன. இதற்கு முறைப்படி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மின் இணைப்பு கொடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர்” என்றார்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “குமாரசக்கனாபுரத்தில் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னர் தான் மேற்கொண்டு பணிகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர். இதற்கிடையே கடந்த 3-ம் தேதி குமாரசக்கனாபுரம் கிராம மக்கள் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.