தென்னரசு 
தமிழகம்

லஞ்ச வழக்கில் கைதான வட்டாட்சியர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தென்னரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் தென்னரசு (51), கடந்த 5-ம் தேதி பட்டா மாறுதலுக்காக ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புபிரிவு போலீஸார், அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள வட்டாட்சியர் தென்னரசுவீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டின் பரணில் மறைத்து வைத்திருந்த, கணக்கில் வராத ரூ. 45.74 லட்சம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், அவரது சொந்த ஊரான உச்சிப்புளியில் வீடு, வணிக வளாகம், அருப்புக்கோட்டையில் பல கோடி மதிப்பிலான கட்டிடம், மதுரையில் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகக் கட்டிடம் ஆகியவற்றின் ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், லஞ்சம் வாங்கிக் கைதான வட்டாட்சியர் தென்னரசுவை, பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT