தமிழகம்

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் - போலிகளை களையெடுக்க நடவடிக்கை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மக்களவைத் தேர்தலுக்கு முன் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்த உயிரிழந்தவர்கள், ஊரில் இல்லாதவர்கள், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை கண்டறிந்து நீக்கிடவும், புதிய வாக்காளர் பட்டியலை தயார் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும் என கூட்டுறவுத்துறை அவசரக் கடிதம் அனுப்பி வருகிறது. தமிழகத்தில் 14 வகையான 22 ஆயிரத்து 923 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. மாணவர்கள் கூட்டுறவு பண்டக சாலைகள் தவிர மற்ற அனைத்து கூட்டுறவுச் சங்கங் களுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகக்குழு தேர்வு செய்யப்படும்.

தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததால் 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 99 சதவீதம் அதிமுகவினரே வெற்றிபெற்று தற்போது கூட்டுறவுச் சங்க பொறுப்புகளில் உள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் 9 இயக்குநர்கள், ஒரு தலைவர், ஒரு உதவி தலைவர் என 11 பேர் தேர்வு செய்யப்படுவர்.

இதன்படி தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தினால் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிர்வாகப் பொறுப்புக்கு வர வாய்ப்புள்ளது. அதனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தி அந்த பொறுப்புகளுக்கு திமுகவினரை கொண்டு வந்து அவர்களை உற்சாகப்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால், தற்போது கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களாக அதிமுகவினரே அதிகம் பேர் உள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் பெயர்களும், கூட்டுறவுச் சங்கங்கள் உள்ள கிராமங்கள், நகரங்களில் இல்லா தவர்கள் பெயர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களில் உள்ள ஒரே நபரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதனால், இவர்கள் பெயர்களை நீக்கி விட்டு தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது கூட்டு றவுச் சங்கங்களின் வாக்காளர் பட்டிலை மறு திருத்தம் செய்து தேர்தலை நடத்த கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட கூட்டு றவுச் சங்க நிர்வாகத்திடம் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை உறுதி செய்ய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை பணியாளர் கள் கூறியதாவது: கூட்டுறவுச் சங்க உறுப்பினராக அந்த சங்கம் உள்ள ஊரில் நிலம் இருக்க வேண்டும். விவசாயம் செய்ய வேண்டும். சங்கத்தில் கடன் பெற்றிருக்க வேண்டும். பணம் டெபாசிட் செய்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன.

ஆனால், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்களுடைய புகைப் படமோ, அடையாள அட்டையோ கூட்டுறவுச் சங்கத்தில் இல்லை. அதனால் உயிரிழந்தோர், நிலத்தை விற்று விட்டு ஊரில் இல்லாதோர் தேர்தல் நடக்கும் நாளில் ஆள் மாறாட்டம் செய்து எளிதாக வாக்களித்தனர். அதனால் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை.

இது தொடர்பாக ஏராளமானோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்ததால் கூட்டுறவுச் சங்கங்களை எளிதாக நடத்த முடியவில்லை. முன்பு மக்களவைத் தேர்தலுக்கு பிறகே கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்த திமுக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது கட்சியினருக்கு பதவிகளை வழங்கினால் தேர்தலில் சுறுசுறுப்பாக பணிபுரிவர் என்பதால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

இதற்காக வாக்காளர் பட்டியலில் இடம் பெற உறுப்பினர்களுடைய ஆதார் எண்களை இணைக்க கூட்டுறவு சங்கங்கள் கடிதம் அனுப்புகின்றன. ஆனால் உறுப்பினர்கள் தயங்குகின்றனர். ஆதார் எண்ணை இணைத்தால் தங்கள் விவரம் அனைத்தும் தெரிந்து விடுமோ, மோசடி நடந்து விடுமோ என்று அச்சம் அடைந்துள்ளனர்.

உதாரணமாக, தமிழக அரசு தலைமைச் செயலக கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் தற்போது வரை ஆதார் எண்ணை இணைக்க முன் வரவில்லை. ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத் திலும் 2 ஆயிரம், 3 ஆயிரம், 10 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனை வருக்கும் ஒரே நேரத்தில் தபால் அனுப்ப முடியவில்லை.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT