தமிழகம்

அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா; அக்.17 முதல் 4 நாட்களுக்கு தொகுதிவாரியாக பொதுக்கூட்டங்கள்: பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொகுதிவாரியாக 4 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எம்ஜிஆர் தோற்றுவித்து, ஜெயலலிதா போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, அனைத்து சட்டப்பேரவை தொகுதிகள், கட்சி செயல்படுகிற புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்.17, 18, 26, 28 ஆகிய 4 நாட்கள் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள், அதில் சிறப்புரை நிகழ்த்துவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் நான் 18-ம் தேதி உரையாற்ற உள்ளேன்.

மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணி பிரதிநிதிகளுடன் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, தங்கள் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும். கட்சி எம்எல்ஏக்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி. எம்எல்ஏக்கள் ஆகியோர் தாங்கள் சார்ந்த சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள், படங்களுக்கு 17-ம் தேதி மாலை அணிவித்து, இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம், நலத் திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாட வேண்டும்.

SCROLL FOR NEXT