கோவை: தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.9-ம் தேதி (நேற்று) மாநிலம் முழுவதும் நிறுவனங்களில் கருப்புக் கொடியேற்ற தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, கோவையில் கணபதி, ஆவாரம்பாளையம், இடையர்பாளையம் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழில் முனைவோர் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால், சுருளிவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பரில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.இதனால் 8 லட்சம் தொழில்முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தொழிலை விட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோவாட்டுக்கு ரூ.35-ல்இருந்து ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு தரப்பினருக்கு ரூ.550 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார நிலைக் கட்டணம் மற்றும் உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணஉயர்வைக் கைவிட வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சென்னையில் வரும் 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.