சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தினை, தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்க் குடமுழுக்கு கூட்டியக்கத்தினர். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழ் குடமுழுக்கு கூட்டு இயக்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. கும்பாபிஷேக நாளன்று, சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகத்தை, தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சேலத்தை அடுத்த இளம்பிள்ளையைச் சேர்ந்த தமிழ்க் குடமுழுக்குக் கூட்டியக்கம் சார்பில் ஓம் பதினெண் சித்தர் குரு குலப் பள்ளி தலைவர் சத்திய மூர்த்தி தலைமையில் 10 பேர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனு குறித்து சத்திய மூர்த்தி கூறியது: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், பல நூறு ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோயிலின் குடமுழுக்கு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகம், பிரதிஷ்டை பூஜை என சமஸ்கிருத வழிபாட்டு அடிப்படையில் குடமுழுக்கு அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், உத்தரவுக்கு மாறாக, கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாரியம்மன் கோயில் மரபின வழிபாட்டு முறையானது கம்பம் நடுதல்,

அலகு குத்துதல், மா விளக்கு ஏந்துல், ஆடு கோழி பலியிடுதல், பொங்கலிடுதல், மஞ்சள் நீராட்டுதல் ஆகிய அனைத்தும் சமஸ்கிருத வழிபாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, கோயிலின் குடமுழுக்கினை, சித்தர்கள் அருளிய தமிழ் மந்திரங்கள், நாயன்மார்களின் திருமுறை ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த தோத்திரங்கள் தமிழின ஆச்சாரியார்களால் ஓதப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல், சமஸ்கிருதத்தை மட்டுமே முன்னிறுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ஆர்ப்பாட்டம்: இதேபோல், சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகத்தை, தமிழில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் இணைந்து சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில், தமிழர் கலாச்சார இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பொன் சரவணன் தலைமை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேச மக்கள் முன்னணி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், தமிழில் மந்திரங்கள் ஓதி குட முழுக்கு நடத்த, தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

உள்ளூர் விடுமுறை: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் ஆடித் திருவிழாவுக்கு, பொங்கல் வைக்கின்ற நாளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே. கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில்,

கும்பாபிஷேக நாளான வரும் 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத் தலைமையிலான பாஜக-வினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் கலந்து கொள்ளும் வகையில் கும்பாபிஷேக நாளன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT