பொள்ளாச்சி: தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவு செய்த பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த செல்வகுமார்(36), பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பதிவிட்டுள்ளதாக, திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகசாமி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளத்தை தவறாகப் பயன்படுத்துதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் செல்வகுமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர்.
இதையறிந்த பாஜகவினர், நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பிரதமர் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிடும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யாமல், பாஜக நிர்வாகிகள் மீது மட்டுமே போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, செல்வகுமார் கைதுக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.